6 March 2014

மறைத்து வைக்கப்படும் நேசம்


அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...


சாந்தியும், சமாதானமும் இறைவன் புறத்திலிருந்து
தங்களை வந்தடையட்டும் சகோதர,சகோதரிகளே... :)


எனக்கு பின்னால் மாட மாளிகையை கட்டாதீர்கள்,
திரும்பி பார்க்காமலே நான் மரணித்து விடலாம். 

மாறாக, 

எனக்கு முன்னால் சிறு மணல் வீடு கட்டுங்கள்,
கலைந்து விட்டாலும், கண்டுகொண்ட மகிழ்ச்சி போதும். 

-யாரோ 

இவ்வாசகமானது,

அதிகமாகினும் மறைத்து வைக்கப்படும் நேசத்தின் பயனற்ற தன்மையையும்,

குறைவாகினும் வெளிப்படுத்தும் நேசத்தின் நிறைவையும் உணர்த்துகிறது.



இன்று கணவன்,மனைவி,பெற்றோர்,பிள்ளைகள், சகோதரர்கள் என அனைத்து உறவுகளுக்குள்ளேயும் புரிதல் குழப்பம் வந்து பிரிவினை ஏற்பட நேசத்தை வெளிப்படுத்தாமையும் ஒரு காரணமே.

உவமையாக சொன்னால் ஒருவர் தன் பிள்ளை மீது அதிகமதிகம் நேசம் கொண்டிருப்பார், ஆனால் அதை வெளிக்காட்ட தெரியாமலோ, வெளிக்காட்ட தேவையில்லை என்றோ இருந்திருப்பார்.

இவரின் நேசத்தை உணராத அந்த பிள்ளைக்கு தந்தை மீது பிடிப்பின்மை ஏற்பட்டு நாளடைவில் அது அலட்சியமாகி, வெறுப்பாக உருவெடுத்து மனக்கசப்பில் முடிந்து விடும்.

பின்பு "நான் என் பிள்ளை மீது எவ்வளவு நேசம் வைத்திருந்தேன், ஆனால் என் பிள்ளை என்னை புரிந்து கொள்ளவில்லையே" என்று புலம்புவதில் எந்தப் புண்ணியமுமில்லை.

இவ்விஷயம் கேட்பதற்கு சிறிதானதாய் தோன்றினாலும் ஆழ்ந்து யோசித்தால் இன்றைய அவசர உலகில் பெரும்பாலான வீடுகளில் வெறுமை நிலவுவதற்கு இதுவும் ஒரு காரணம் என்பது எளிதில் பிடிபடும்.

வாழ்வின் வசந்ததிற்கு அனைத்து வழிகாட்டுதல்களையும் வழங்கும் இஸ்லாம் இவ்விஷயத்திலும் இனிதே நமக்கு வழிகாட்டுகிறது.

நான் அல்லாஹ்வின் தூதரிடத்தில் அமர்ந்திருந்தேன்.
அப்போது ஒருவர் கடந்து சென்றார். அக்கூட்டத்தில் இருந்த ஒருவர் அல்லாஹ்வின் தூதரே(கடந்து செல்லும்) இவரை நான் நேசிக்கிறேன் என்று கூறினார்.

நபி (ஸல்) அவர்கள் இதை அவரிடம் தெரியப்படுத்தினாயா? என்று கேட்டார்கள்.அவர் இல்லை என்று சொன்னார்.

நபி (ஸல்) அவர்கள் அப்படியானால் எழுந்து சென்று அவருக்கு தெரியப்படுத்து என்று கூறினார்கள்.

அவர் அந்த நண்பரிடம் எழுந்து சென்று இன்னாரே அல்லாஹ்வின் மீது சத்தியமாக அல்லாஹ்விற்காக நான் உங்களை விரும்புகிறேன் என்று கூறினார். அதற்கு அவர் எவனுக்காக என்னை நீங்கள் நேசிக்கிறீர்களோ அவன் உங்களை நேசிப்பானாக என்று கூறினார்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரலி)
நூல்: அஹ்மத் (11980)



இதுபோல் திருக்குறளும் "அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்" என அன்பு என்பது உள்ளுக்குள் கட்டுப்படுத்தி வைக்கக் கூடியதல்ல என்பதை  வலியுறுத்துகிறது.

ஆகையால் நிலையற்ற இவ்வுலகில்
வாழும் காலம் வரை நேசத்தை

பொக்கிஷமாக எண்ணி பூட்டி வைக்காமல்
பொங்கும் நதியாய் பரவ விடுங்கள்.
பூவுலகம் செழிக்கட்டும்.

இறைவன் நாடினால்...

No comments:

Post a Comment

உங்கள் எழுத்து.... உங்கள் அடையாளம்....