28 January 2014

இவர்களையெல்லாம் உயிருடன் புதைத்து விடலாமா???


அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...தலைப்பை சூடாக்கி பதிவுக்கு இழுத்து வரும் வெற்று வார்த்தைகள் அல்ல இவை. அனுதினமும் ரணமாகிக் கொண்டிருக்கும் உள்ளங்களின் எதார்த்தமான கேள்வி.

துறவறம் என்றதும் உங்களுக்கு நினைவில் வருவதென்ன? ஏதேனும் ஒரு சாமியார்,பாதிரியார்,கன்னியாஸ்திரி இன்னும் இன்னும் சிலர்...

இவர்களின் இந்த துறவற வாழ்க்கை ஏற்றுக் கொள்ளக் கூடியதா? என கேட்டால் அது அவர்களின் உரிமை என்பதையும் தாண்டி ஒரு இஸ்லாமியனாக மட்டுமல்ல, ஒரு மனிதனாகவும் மனித சமுதாயத்தை அழிவை நோக்கி இட்டுச்செல்லும் இயற்கைக்கு மாற்றமான இம்முறை ஏற்றுக் கொள்ள முடியாததே என்பேன்.

ஆனால், சிலர் விரும்பி ஏற்றுக் கொள்ளும் துறவறத்தை எதிர்க்கும் நாம் பலர் கட்டாயத்தின் பேரில் ஏற்றுக் கொள்ளும் துறவறத்தை பற்றி குறைந்த பட்சம் யோசித்ததாவதுண்டா??? வேறு வழியின்றி உணர்வுகளை உள்ளுக்குள்ளே புதைத்து வாழும் அவர்களை பற்றியும் சிந்திப்போம்.அழகாய் தெரியாத ஆண்-பெண் 

குணத்தை புறந்தள்ளி பணத்தை பார்த்தது போல் அதனுடன் அழகும் இப்பொழுது அத்தியாவசியமாகி விட்டது திருமண உலகில். மூக்கு கூராக இருக்கணும்,பல் முத்து,முத்தா இருக்கணும்,முகம் லட்சணமா இருக்கணும், அந்த நடிகர் மாதிரி இருக்கணும், இந்த நடிகை மாதிரி இருக்கணும் என இவர்களின் எதிர்பார்ப்புக்கும் பட்டியலில் உள்ள மாதிரியான இயந்திரத்தை தேடித் தேடி வழிநெடுக எத்தனை உள்ளங்களை உடைத்து விட்டு செல்கிறார்கள்.

பார்க்கும் ஒவ்வொருவரும் வேண்டாம் என சொல்லி சொல்லி திருமணத்தையே வெறுத்து அழகாய் பிறக்காதது என் குற்றமா? என உள்ளுக்குள்ளே குமுறிக் கொண்டிருப்பவர்களுக்கு என்ன பதில் இருக்கிறது துறவறம் கூடாது என்பவர்களிடம்?

ராசியில்லா பெண்?

பொண்ணு பார்க்க கிளம்பும் போதே கரண்ட் கட் ஆகிடுச்சு, பல்ப் பியூஸ் போயிடுச்சு, பூனை குறுக்கால போயிடுச்சு, யானை சைடுல போயிடுச்சு, செவ்வாய் தோஷம், புதன் தோஷமுன்னு ஒன்றுமில்லாத விசயங்களை ஊதிப் பெரிதாக்கி ஒரு பெண்ணை "ராசியில்லாதவள்" என முத்திரை குத்தி ஒதுக்கி தள்ளி வைக்கும் சம்பவங்கள் இன்றும் நடந்து கொண்டு தானே இருக்கிறது?

இப்படியான தொடர் பேச்சுகளால் "தான் ராசியில்லாதவளோ"  என அந்த பெண்ணுக்குள்ளே ஒரு தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கி திருமண பேச்சை எடுத்தாலே அச்சம் கொண்டு ஒதுங்கி வாழும் நிலையில் உள்ள பெண்களுக்கு என்ன பதில் இருக்கிறது துறவறம் கூடாது என்பவர்களிடம்?


ஏழை மாப்பிள்ளை 


மாப்பிள்ளை பேர்,ஊர்,குணம்,குடும்பம் இது போன்ற அநாவசியமான கேள்விகளுக்கு முன்னாடி ஒரு அவசியமான கேள்வி வந்து நிக்கும் பாருங்க. மாப்பிள்ளை மாசம் எவ்ளோ சம்பாதிக்கிறார்? பணம் அத்தியாவசிய தேவையே, எனினும் அது மட்டுமே பார்த்து பெண் கொடுப்பது சரியா? ஏழை மற்றும் குறைந்த வருமானம் கொண்ட என எத்தனையோ ஆண்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்.

கொடிது கொடிது வறுமை கொடிது: அதனினும் கொடிது இளமையில் வறுமை- இதில் இக்கொடுமையையும் சேர்த்து அனுபவிக்கும் ஆண்களுக்கு என்ன பதில் இருக்கிறது
துறவறம் கூடாது என்பவர்களிடம்?


வரதட்சணையால் வாடி வதையும் பெண்கள் 

தன் பெற்றோர்,உறவினர்,வீடு,ஊர் என அனைத்தையும் விட்டு விட்டு காலம் முழுதும் உங்களுக்கு இலவச சேவை செய்ய வரும் பெண்களிடம் கூலி வாங்கும் வினோதம் ஏன்? இந்த வரதட்சணையால் திருமணமாகாமல் தன் ஏக்கங்களையும்,ஆசைகளையும் கனவோடு மட்டுமே முடித்துக் கொண்டு வாழும் முதிர் கன்னிகள் இங்கு எத்தனை,எத்தனை?

தன் குடும்பத்துக்கும் பாரமாகி, தன் ஆசைகளை வெளிப்படுத்திக் கூட பேச இயலாமல் வெந்து சாகும் மனத்தின் ரணம் உணர்ந்ததுண்டா என்றேனும்? இவர்களுக்கு என்ன பதில் இருக்கிறது
துறவறம் கூடாது என்பவர்களிடம்?

கணவனை இழந்த பெண்கள் 

மேலுள்ள அனைத்து சிக்கல்களையும் போராடி தாண்டி திருமணம் முடிந்தாலுமே மனக்கசப்பால் கணவனை விட்டு பிரிந்து விட்டாலோ, அல்லது கணவன் இறந்து விட்டாலோ இப்பெண்கள் பிறந்த வீட்டில் படும் துன்பம் சொல்லில் முடியாது. தனிமை,எதிர்காலத்தை பற்றிய அச்சம்,குடும்பத்தினரின் உதாசீனப் பேச்சு இதோடு தன் மீதி வாழ்நாளை கஷ்டப்பட்டு கடத்திக் கொண்டிருக்கும் இவர்களுக்கு என்ன பதில் இருக்கிறது துறவறம் கூடாது என்பவர்களிடம்?


மாற்றுத்திறனாளிகள் 

நிலவிலேயே குறை காணும் சமூகத்துக்கு குறை விளக்கி நிறை காணவா தோன்றும்.என்னதான் தன்னம்பிக்கையுடன் சாதித்து காட்டி நின்றாலும் இவர்களை அவ்வளவு எளிதில் யாரும் திருமணம் முடிப்பதில்லை என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தங்களை சக மனிதர்களாக பார்க்க வைப்பதற்கே இவர்கள் போராட வேண்டிய சிக்கலான சமூக சூழலில் இவர்களின் கல்யாணக் கனவுகள் எல்லாம் காற்றோடுதான் கலைந்து செல்கிறது.

இவ்வனைத்திலும் விதிவிலக்குகள் ஆங்காங்கே இருந்தாலும் கூட இறுதியிலும் அதே கேள்வி முன் நிற்கிறது.

என்ன பதில் இருக்கிறது துறவறம் கூடாது என்பவர்களிடம்?

எளிதாக பதில் அளித்து விடலாம், இவர்கள் ஒவ்வொருவரும் தம்மை போன்று பாதிக்கப்பட்டவர்களையே திருமணம் செய்து கொள்ளலாமே என்று.

ஆனால் இது விலங்குகள் விலங்குகளை தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற தோரணையை ஒத்த தீர்வாக தோன்றுகிறது.சமூத்தில் இருந்து ஒரு பிரிவை ஒதுக்கி அவர்கள்,அவர்களுக்குள்ளேயே திருமண பந்தம் முடிக்கவேண்டும் என்பது ஆரோக்கியமான நடைமுறையல்ல.

இப்பொழுதும் உறுதியாக ஒன்றை கூறிக் கொள்கிறேன். நான் துறவறத்தை ஆதரிக்கவில்லை. ஆனால் இந்த தீமையை வேறு வழியின்றி ஏற்றுக் கொண்டு வாழ்பவர்களுக்கு மாற்று தீர்வை முன் வைப்பது அல்லது சமூக மாற்றத்தை கொண்டு வருவது நம் கடமை என்றே சொல்கிறேன்.

மேலே நாம் பார்த்தது போன்று இன்னும் எத்தனையோ வகையினர் இருக்கின்றனர். அவர்கள் அனைவரையும் ஒரு வரிக்குள் அடைக்க வேண்டுமென்றால்,

திருமண சந்தையில் விலை போகாதவர்கள்.

காய்கறி சந்தையில் மக்கள் வாங்காமல் விட்ட அழுகிய காய்கறிகள் போலவே இவர்களின் நிலையும்... அவற்றை குப்பையில் கொட்டி விடலாம்.

இவர்களை.............???

தலைப்பை படித்துக் கொள்ளுங்கள்.


7 comments:

 1. காதல் மற்றும் கலப்பு திருமணங்களை மட்டும் இந்திய சமூகம் ஏற்றுக்கொண்டால் மேலே சென்ன அனைத்தும் மாறும்.

  ReplyDelete
 2. நூருத்தீன்29 January 2014 at 12:42 AM

  சிந்தனையைத் தூண்டும் அழகிய பதிவு. மிக்க நன்றி.

  ReplyDelete
 3. //இவர்கள் ஒவ்வொருவரும் தம்மை போன்று பாதிக்கப்பட்டவர்களையே திருமணம் செய்து கொள்ளலாமே என்று.//

  ஒரு உதாரணம் சொல்கிறேன். என் உறவினரின் தங்கை - கருப்பு நிறம். மிக மிக மிகக் கஷ்டப்பட்டு ஒரு மாப்பிள்ளை (கருப்புதான் - மிக நல்லவர்) கிடைத்தார். அல்ஹம்துலில்லாஹ். தங்கையின் திருமணத்தால் தடைபட்டிருந்த அவரின் திருமணத்திற்கு பெண் தேட ஆரம்பித்தார் - “வெள்ளைப் பொண்ணு”தான் வேண்டும் என்ற கண்டிஷனோடு!! :-(

  இன்னொரு உறவினர், (வறுமையால்) படிக்கவில்லை என்பதால் தன் மகள்களின் திருமணம் தாமதப்பட்ட காரணத்தால், தன் மகனுக்குப் படிக்காத பெண்ணையே தேடி திருமணம் செய்துவைத்தார்.

  ReplyDelete
 4. //எளிதாக பதில் அளித்து விடலாம், இவர்கள் ஒவ்வொருவரும் தம்மை போன்று பாதிக்கப்பட்டவர்களையே திருமணம் செய்து கொள்ளலாமே என்று.

  ......சமூத்தில் இருந்து ஒரு பிரிவை ஒதுக்கி அவர்கள்,அவர்களுக்குள்ளேயே திருமண பந்தம் முடிக்கவேண்டும் என்பது ஆரோக்யமான நடைமுறையல்ல.//

  அப்படியல்ல. பாதிக்கப்பட்டவர்கள் தாம் உணரும் அதே வலியை உணரும் இன்னொருவரின் வலியை, அவரே புரிந்துகொண்டு ஆதரளிக்கவில்லையென்றால், அந்த வலியைக் கண்டுமட்டுமே உணரும் யாரோ ஒருவர் எப்படிப் புரிந்துகொள்வார் என்றுகூட எடுத்துக் கொள்ளலாம்.

  ReplyDelete
  Replies
  1. ///தம்மை போன்று பாதிக்கப்பட்டவர்களையே///

   இங்கு பாதிக்கப்பட்டவர்க'ளையே என்பது பாதிக்கப்பட்டவர்களை மட்டுமே என்ற பொருளில் கூறப்பட்டதே ஒழிய பாதிக்கப்பட்டவர்களுக்குள் திருமணமே நடக்க கூடாது என்ற பொருளில் அல்ல.

   அதைத்தான் பின்வரும் வரிகளில்,

   சமூத்தில் இருந்து ஒரு பிரிவை ஒதுக்கி அவர்கள்,அவர்களுக்குள்ளேயே திருமண பந்தம் முடிக்கவேண்டும் என்பது ஆரோக்யமான நடைமுறையல்ல.

   என்று கூறியிருந்தேன்.

   இருவகை திருமானங்களும் இயல்பாய் நடக்க வேண்டும் என்பதே நான் கூற வந்தது.

   Delete
 5. இறைவன் அளித்த சிந்தனைத் திறனை திறம்பட பயன்படுத்தியிருக்கிறீர்கள்.. எழுத்துத் துறையில் மறுமலர்ச்சியை இன்ஷா அல்லாஹ் உங்கள் மூலம் அல்லாஹ் நாடியிருக்கக் கூடும்..

  ReplyDelete
 6. இறைவன் அளித்த சிந்தனைத் திறனை திறம்பட பயன்படுத்தியிருக்கிறீர்கள்.. எழுத்துத் துறையில் மறுமலர்ச்சியை இன்ஷா அல்லாஹ் உங்கள் மூலம் அல்லாஹ் நாடியிருக்கக் கூடும்..

  ReplyDelete

உங்கள் எழுத்து.... உங்கள் அடையாளம்....